ரெயிலுக்குள் இடம்பிடித்தது ஏ.டி.எம். எந்திரம்
- மன்மத் ரெயில் நிலைய பணிமனையில் இதற்கான வேலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
- ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணத்தை எடுத்துக்கொள்ள ஏதுவாக ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு வந்தது. பிரதான சாலைகள், மார்க்கெட் பகுதிகள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஏ.டி.எம். எந்திரம் வாடிக்கையாளர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. வங்கிக்கு சென்று கால்கடுக்க நின்று பணம் எடுக்கும் காலத்தை ஏ.டி.எம். எந்திரங்கள் மலையேற செய்தன. சமீபகாலமாக யு.பி.ஐ. வசதி பிரபலமானாலும், ரொக்கத்தை கையில் எடுத்து செலவு செய்வதை பலரும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரம் தற்போது பயணிகளின் வசதிக்காக ரெயிலுக்கு உள்ளேயும் இடம்பிடித்து விட்டது. சோதனை முயற்சியாக மகாராஷ்டிராவில் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையம்- நாசிக் மாவட்டம் மன்மத் ரெயில் நிலையம் இடையே இயக்கப்படும் பஞ்சவட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. மன்மத் ரெயில் நிலைய பணிமனையில் இதற்கான வேலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
தனியார் வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏ.டி.எம். எந்திரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சொகுசு இருக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டியில் நிறுவப்பட்டு உள்ளது. ரெயிலில் உள்ள பெட்டிகள் அனைத்திற்கும் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் பாதைகள் இருப்பதால் பயணிகள் ஏ.டி.எம். எந்திரத்தை எளிதாக அணுக முடியும் என்று மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மற்ற ரெயில்களிலும் இதேபோன்ற வசதியை பயணிகள் எதிர்பார்க்கலாம்.