அரியானாவை உலுக்கிய ஆணவக்கொலை.. இளம்பெண்ணை வீடுபுகுந்து சுட்டுக் கொன்ற சகோதரன்
- வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அரியானா மாநிலம் ரோஹ்தக்கின் காஹ்னி கிராமத்தை சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் சூரஜை, சப்னா (23 வயது) தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இதுநாள் வரை காஹ்னி கிராமத்திலிருந்து விலகி வாழ்ந்து வந்த தம்பதி அண்மையில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9:40 மணியளவில், சப்னாவின் சகோதரர் சஞ்சு மற்றும் அவரது மூன்று நண்பர்கள் தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூரஜின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார். தாக்குதல் நடந்த நேரத்தில் சூரஜ் வீட்டில் இல்லாததால் உயிர்த்தப்பினார்.
அங்கிருந்து தப்பிய கும்பல் அன்றைய இரவே சூரஜையும், லடோத்-போஹர் சாலையில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவரை வழிமறிக்கத் தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், நான்கு குற்றவாளிகளும் காயமடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக ரோஹ்தக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.