இந்தியா

பிரதமர் மோடியை விமர்சனம் செய்வோர் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்: அசோக் கெலாட் பரபரப்பு பேச்சு

Published On 2023-04-28 17:08 GMT   |   Update On 2023-04-28 17:08 GMT
  • நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.
  • பாஜகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என அசோக் கெலாட் விமர்சனம்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் தகுதிவாய்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை வழங்குவதற்காக 'பணவீக்க நிவாரண முகாம்கள்' நடத்தப்படுகின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்க, 10 மக்கள் நலத் திட்டங்களில் ஏழை, எளிய மக்களை இணைக்கவும், உடனடி பலன்களை வழங்கவும் இந்த முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் அசோக் கெலாட் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

அவ்வகையில் இன்று ஹனுமன்கர் மாவட்டம் ரவாஸ்தர் நகரில் உள்ள முகாமை பார்வையிட்ட முதல்வர் கெலாட், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-

பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் எதையாவது சொல்கிறார், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை. நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் (மோடி) கூறினார். இப்போது நீங்கள் (மோடி) இரண்டு முறை நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள். ஏன் சட்டம் இயற்றப்படவில்லை?

மோடியின் ஆட்சியில் விமர்சிப்பவர் துரோகி. விமர்சித்தால் சிறைக்கு செல்வீர்கள். அவர்கள் (பாஜக-வினர்) நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.

நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. வாழ்வின் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. சோனியா காந்தி என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நான் மூன்று முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளேன். மத்தியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News