இந்தியா

தேனீக்கள் சூழ்ந்ததால் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம்- வீடியோ வைரல்

Published On 2025-07-08 15:09 IST   |   Update On 2025-07-08 15:09:00 IST
  • அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
  • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் (மொத்தம் 260பேர்) உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சில இடங்களில் விமானம் புறப்படும் நேரத்தில் பறவை மோதல் போன்ற சம்பவங்களால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சூரத் மாநிலத்தில் இருந்து ஜெய்பூருக்கு புறப்பட வேண்டிய விமானத்தை தேனீக்கள் சூழ்ந்ததால் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக பயணிகள் காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூரத் சர்வதேச விமான நிலையத்தில் ஜெய்ப்பூருக்கு செல்ல இண்டிகோ விமானம் தயாரானது. விமானத்தில், பைலட்கள், பயணிகள் என அனைவரும் வந்து அமர்ந்திருக்க, விமானத்தின் லக்கேஜ் கதவு திறப்பின் ஒரு பகுதியில் தேனீக்கள் சூழ்ந்து கொண்டதால் செய்வதறியாது விமான ஊழியர்கள் தவித்தனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, தேனீக்களை விரட்ட முதலில் புகை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது வேலை செய்யவில்லை. கடைசியாக, ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லக்கேஜ் கதவில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதையடுத்து தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விமானம் தாமதமாக ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



Tags:    

Similar News