இந்தியா
null

34 ஆண்டுகளில் 57 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்ட அசோக் ஐ.ஏ.எஸ் நாளை ஓய்வு - யார் இவர்?

Published On 2025-04-30 11:26 IST   |   Update On 2025-04-30 11:57:00 IST
  • சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராமில் உள்ள ஒரு நில ஒப்பந்தத்தை அசோக் கெம்கா ரத்து செய்தார்.
  • பிரதமர் மோடி தேர்தல் பேரணிகளில் இந்த நில ஒப்பந்தம் குறித்து விமர்சித்தார்.

தனது 34 ஆண்டுகால சேவையில் 57 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 1991 பேட்ச் ஐஏஎஸ் ஆன அசோக் தற்போது அரியானா, போக்குவரத்துத்துறை கூடுதல் துணை செயலாளராக உள்ளார். கடந்த டிசம்பர் 2024 இல் அவர் இந்த பதவிக்கு மாற்றப்பட்டார்.

அசோக் கெம்கா நேர்மைக்கும் துணிச்சலான முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர். 2012 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராமில் உள்ள ஒரு நில ஒப்பந்தத்தை அசோக் கெம்கா ரத்து செய்தார்.

இந்த ஒப்பந்தம் ராபர்ட் வதேராவிற்கும் DLF நிறுவனத்திற்கும் இடையே 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதை ரத்து செய்ததன் மூலம் அசோக் கெம்கா கவனம் பெற்றார்.

நில ஒப்பந்தத்தை ரத்து செய்ய கெம்கா உத்தரவு பிறப்பித்தபோது, அந்த நேரத்தில் அரியானாவில் காங்கிரஸ் அரசு இருந்தது. பூபேந்திர சிங் ஹூடா முதலமைச்சராக இருந்தார்.

இதற்குப் பிறகு, பாஜக இந்த நில ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு கையில் எடுத்தது. பிரதமர் மோடி தேர்தல் பேரணிகளில் இந்த நில ஒப்பந்தம் குறித்து விமர்சித்தார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலாக செயல்பட்ட அசோக் கெம்கா முந்தைய ஆட்சிலும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாறிய பிறகும் மொத்தமாக இதுவரை 57 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில், அவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்துத் துறைக்குத் திரும்பினார். முன்னதாக 2014 ஆம் ஆண்டு, போக்குவரத்து ஆணையராக இருந்தபோது, பெரிய வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்க அவர் மறுத்துவிட்டார். இதன் பின்னர் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

2024 ஆம் ஆண்டு, கெம்கா முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி, தன்னை விஜிலென்ஸ் துறையில் பணியமர்த்தக் கோரினார்.அந்த கடிதத்தில், "எனது சேவையின் முடிவில், ஊழலுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்துவதாக நான் உறுதியளிக்கிறேன்" என்று அவர் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நாளை பணி ஓய்வு பெற உள்ள அசோக் கெம்காவுக்கு அரியானா ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்று மாலை சண்டிகரில் பிரியாவிடை விழா ஏற்பாடு செய்துள்ளது.  

Tags:    

Similar News