தொடர் ரெயில் விபத்துகள் பா.ஜ.க. அரசுக்கும் இழப்பு: எச்சரிக்கும் ஒவைசி
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
- ஜார்க்கண்டில் ரெயில்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
ஐதராபாத்:
கேரள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இதேபோல், ஜார்க்கண்டில் ரெயில்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு மற்றும் ஜார்க்கண்ட் ரெயில் விபத்து தொடர்பாக ஐதராபாத் எம்பியான அசாதுதின் ஒவைசி கூறியதாவது:
வயநாட்டில் நிலச்சரிவு சம்பவம் இயற்கையானது. இதற்கு இயற்கையான காரணம் உண்டு.
ஆனால் அடிக்கடி ஏற்படும் ரெயில் விபத்துகளை சாதாரணம் என சொல்லமுடியாது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கமுடியாத அரசு இந்த வழக்கில் தவறு செய்துள்ளது. இந்த விபத்துகளால் உயிரிழப்பு மட்டுமின்றி, ரெயில்வே உடைமைகளும் சேதம் அடைகின்றன.
இது பா.ஜ.க.வுக்கு அரசியல் ரீதியாகவும் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது குறித்து கூறுகையில், இது எங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம். இந்தப் பதக்கத்தைப் பெற அவர்கள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என பாராட்டு தெரிவித்துள்ளார்.