கடவுள் குறித்து அவதூறு செய்ய விட மாட்டேன் - சந்திரபாபு நாயுடு
- ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன்.
- ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அமராவதி வெங்கடபாலத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 2-வது பிரகாரம், 7 மாடி மகாராஜா கோபுரம், 3 கோபுரங்கள் ஆர்ஜித சேவை மண்டபம், வாகன ரத மண்டபம், பஞ்சமுக ஆஞ்சநேய சாமி சிலை மற்றும் புஷ்கரணி ரூ.260 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஏழுமலையான் முன்னிலையில் மக்கள் தூய்மையாகவும், சுத்தமாகவும், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். கோவில் விரிவாக்க பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் நான் சிறு வயதிலிருந்து ஏழுமலையானை வணங்கி வருகிறேன்.
ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன். அங்கு சாதாரண மனிதனாக இருப்பதுதான் என்னுடைய உணர்வு. தவறு செய்தவர்கள் அடுத்த பிறவில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
தவறு செய்தவர்களுக்கு இந்த பிறவிலேயே அவர்களை ஏழுமலையான் தண்டிப்பார். சாமியை தரிசிக்க செல்லும் அனைவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும். ஏழுமலையானை யாரும் அவதூறு செய்ய விடமாட்டேன். கடந்த 2003-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இருந்து எனது உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும். மும்பையில் ரூ.100 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோவிலை கட்ட ரேமன்ட் நிறுவனம் முன் வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.