குஜராத் அருகே ரூ.1,800 கோடி போதைப் பொருள் பறிமுதல்: தீவிரவாத தடுப்பு பிரிவுப்படை அதிரடி
- படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு தப்பி ஓட்டம்.
- பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள்.
அகமதாபாத்:
குஜராத் கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருங்கிணைந்து ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகும்.
நேற்று அவர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும் படி வந்த ஒரு படகை நிறுத்த உத்தரவிட்டனர்.
ஆனால் அந்த படகு நிற்காமல் தப்பிச் சென்றது. அந்த படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு விட்டு படகை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த கடல் பகுதியில் குதித்து ஆய்வு செய்தனர். அப்போது பல மூட்டைகள் கிடைத்தன. அவற்றை கப்பலுக்கு கொண்டு வந்து பார்த்த போது மூட்டைக்குள் போதைப் பொருள் பொட் டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
300 கிலோ அளவுக்கு அந்தப் போதைப் பொருட்கள் இருந்தன. அதில் பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள் என்று தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தான் போதைப் பொருள் வியாபாரிகள் இவற்றை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விற்ப தற்காக படகில் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.