இந்தியா

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அன்மோல் பிஷ்னோய்க்கு 11 நாள் காவல்

Published On 2025-11-19 19:40 IST   |   Update On 2025-11-19 19:40:00 IST
  • பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்.
  • விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொலையிலும், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். அவரை கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் வைத்து அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அன்மோல் பிஷ்னோயை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது.

அன்மோல் பிஷ்னோய் மற்றும் இந்தியாவால் தேடப்படும் 2 குற்றவாளிகள் உள்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 200 இந்தியர்களுடன் விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. இவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.

அந்த விமானம் இன்று டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அன்மோல் பிஷ்னோயை விசாரிக்க 15 நாட்கள் காவல் வழங்கும்படி என்ஐஏ கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், அன்மோல் பிஷ்னோவுக்கு 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News