இந்தியா

      நவீன் பட்நாயக்

ஒடிசாவில் நவீன் பட்நாயக் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா

Published On 2022-06-04 23:42 GMT   |   Update On 2022-06-04 23:54 GMT
  • ஒடிசா முதல்வர் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
  • ஒடிசா வரலாற்றில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்வது இதுவே முதல்முறை.

புவனேஸ்வர்:

2024 ஆண்டு நடைபெறும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு முன் தன் அமைச்சரவையை மாற்றி அமைக்க ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திட்டமிட்டிருந்தார்.  ஜூன் 20 முதல் ரோம் மற்றும் துபாய்க்கு நவீன் பட்நாயக் பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்பு அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி தற்போதைய அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி அவர் கூறியிருந்தார். இதையடுத்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 20 அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்கள் நேற்று இரவு முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஒடிசா அரசியல் வரலாற்றில் அனைத்து அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது இதுவே முதல்முறை.

இதனையடுத்து இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பட்டியல் அம்மாநில ஆளுநர் பேராசிரியர் கணேஷிலாலிடம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த சிலருக்கு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு விழாவிற்கு தயாராக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் பதவியை ராஜினாமா செய்த 20 அமைச்சர்களில் 6-க்கும் மேற்பட்டோர் புதிய அமைச்சரவையில் இடம் பெற மாட்டார்கள் என்று ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று லோக் சேவா பவன் வளாகத்தில் உள்ள மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று ஆளுநர் மாளிகை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News