இந்தியா

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்துகிறார் - அமீர்கான்

Published On 2023-04-26 22:36 GMT   |   Update On 2023-04-26 22:37 GMT
  • பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.
  • மன் கி பாத்-100 என்ற ஒருநாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

இந்நிலையில், மன் கி பாத்-100 என்ற ஒருநாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி அனுராக் தாக்குர், இந்தி நடிகர் அமீர்கான், நடிகை ரவீணா டாண்டன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 100 பிரபலங்கள் கலந்து கொண்டனர். மன் கி பாத் நிகழ்ச்சிகளில் பிரதமர் குறிப்பிட்டு பேசிய சாதனையாளர்களும் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்ச்சியில் நடிகர் அமீர்கான் பேசியதாவது:

மன் கி பாத் நிகழ்ச்சி ஒரு தலைவர், பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனம். மக்கள் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துகிறார். ஒரு தலைவர் தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியம். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை. இந்நிகழ்ச்சி மக்கள் இயக்கமாக நடக்கிறது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News