இந்தியா

வயநாட்டில் அட்டகாசம் செய்த புலி சிக்கியது

Published On 2023-09-04 05:40 GMT   |   Update On 2023-09-04 07:25 GMT
  • கூண்டில் சிக்கிய புலியை கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புலி சிக்கியதை தொடர்ந்து சுல்தான் பத்தேரி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி பகுதியில் வனப்பகுதிக்கு அருகே விவசாய தோட்டங்கள் இருக்கும் இடத்தில் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் புலி நடமாட்டம் காணப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்தனர். கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சுல்தான் பத்தேரி அருகே உள்ள கோளரட்டுகுன்று மூலம்காவு பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை புலி சிக்கியது.

புலி சிக்கிய அந்த கூண்டுக்குள் ஆடு ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிடிப்பதற்கு முயன்றபோது கூண்டுக்குள் புலி சிக்கியது. இது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கூண்டில் சிக்கிய புலியை பார்த்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'கூண்டில் சிக்கிய புலியை கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புலி ஆரோக்கியமாக இருந்தால் காட்டுக்குள் விடப்படும். காயம் ஏற்பட்டிருந்தால் சுல்தான் பத்தேரியில் உள்ள கால்நடை நோய் தடுப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

புலி சிக்கியதை தொடர்ந்து சுல்தான் பத்தேரி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதைபோல் வடக்கு வயநாடு வனச்சரகத்திற்குட்பட்ட திருநெல்லி பகுதியில் மற்றொரு புலி அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதனை பிடிக்கவும் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News