ராஜஸ்தானில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த சிறுமி- மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
- மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.
- இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு.
ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் டான்டா நகரை சேர்ந்த சிறுமி பிராச்சி குமாவத் (வயது 9) இவர் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார் .
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பள்ளியில் சக மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட சென்றார். சாப்பாடு பாத்திரத்தை திறந்த போது மாணவிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அவள் வகுப்பிலேயே சரிந்து விழுந்தார்.
பதறிப்போன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
குடும்பத்தினர் அவளை சிகாரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.
மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். காலை பிரார்த்தனை மற்றும் கூட்டத்திலும் பங்கேற்றார். மதிய உணவு நேரத்தில் அவள் மயக்கமடைந்துள்ளார்.
மாணவி மாரடைப்பு காரணமாக இருந்து விட்டதாக தெரிவித்தனர்.
பள்ளியில் பதிவு செய்யப்பட்ட கடைசி வீடியோவில், மாணவி சிரித்துக் கொண்டே தன்னையும் தனது வகுப்புச் சான்றிதழ்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்து செல்வது காணப்பட்டது.
பிராச்சிக்கு எந்த தீவிர அறிகுறிகளும் இல்லை என்றும், அவரது திடீர் மரணம் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், பிறவி இதய நோய் அல்லது மின் தூண்டுதலில் தொந்தரவு இருக்கலாம், பெற்றோர்கள் அவற்றைக் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் அது விசாரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் வர்மா என்பவர் கூறினார்.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.