இந்தியா

ஆந்திராவில் சோகம்: சுற்றுலா பஸ், லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

Published On 2024-02-10 03:21 GMT   |   Update On 2024-02-10 04:33 GMT
  • ஆந்திராவின் நெல்லூர் அருகே லாரி மற்றும் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நெல்லூர் அடுத்த காவாலி, முசுனுர் சுங்கச்சாவடி அருகே லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் எதிரே வந்த மற்றொரு லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து ஐதராபாத் நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான லாரியின் மீது மோதியது.

இதில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் இருந்த பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

லாரியின் மீது பஸ் மோதிய அதிர்ச்சியால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவாலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் 2 பேர், பஸ் டிரைவர், பெண் பயணி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு 2 பேர் இறந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

சந்திரசேகர் (37), கோபிநாத் (23), மனோஜ் (23), ராஜ்குமார் (38), ரமணா (38), பவன் (23), தனவேஸ்வர் (28), ரந்தீர் (31), தினகரன் (46), ஸ்வேதா (19), அஜிதா (30) கண்ணன் (50), ரூபா (30) உள்ளிட்ட 15 பேர் காவாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News