இந்தியா

கையில் தேசிய கொடியுடன் மேடையில் உயிர்விட்ட முதியவர் - வைரல் வீடியோ

Published On 2024-05-31 20:31 IST   |   Update On 2024-05-31 20:31:00 IST
  • பல்வீர் சிங் கையில் தேசிய கொடி ஏந்திய படி நடனம் ஆடினார்.
  • முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்தவர் 73 வயதான பல்வீர் சிங் சப்ரா. இவர் குழு ஒன்றுடன் இணைந்து யோகா பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்தூரில் உள்ள பூட்டி கோட்டி என்ற பகுதியில் பல்வீர் சிங் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ளார்.

பயிற்சிக்கு இடையில், பல்வீர் சிங் தனது கையில் தேசிய கொடி ஏந்திய படி தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். நடனம் ஆடிக் கொண்டிருந்த போது, பல்வீர் சிங் மேடையிலேயே கீழே விழுந்தார். முதலில், அவர் நடனத்தின் அங்கமாக கீழே விழுந்திருப்பார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.

கீழே விழுந்த பல்வீர் சிங் சில நிமிடங்கள் ஆகியும் எழாமல் படுத்த நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குழுவினர் அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பல்வீர் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய பல்வீர் சிங் சப்ராவின் மகன் ஜக்ஜீத் சிங், "எனது தந்தை பல ஆண்டு காலமாக தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். அவர் இதுதவிர சமூக சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்," என்று தெரிவித்தார்.

உயிரிழந்த பல்வீர் சிங் சப்ராவின் கண்கள் மற்றும் சருமத்தை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

Tags:    

Similar News