இந்தியா

மூன்றாவது நாளாக நீடிக்கும் குர்மி அமைப்புகளின் போராட்டம்... 64 ரெயில்கள் இன்று ரத்து

Published On 2023-04-07 13:59 IST   |   Update On 2023-04-07 13:59:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
  • குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தங்களது மொழியான குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பழங்குடியினர் அங்கீகாரம், சர்னா மதத்தை அங்கீகரித்தல் மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குர்மலி மொழியைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

தென்கிழக்கு ரெயில்வேயின் முக்கியமான வழித்தடங்களான காரக்பூர்-டாடாநகர் மற்றும் ஆத்ரா-சண்டில் வழித்தடங்களில் பல்வேறு குர்மி அமைப்பினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 64 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தென்கிழக்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் காரணமாக ஏப்ரல் 5ம் தேதி முதல் இதுவரை 225 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தின் தக்க்ஷின் தினாஜ்பூர், புருலியா, ஜார்கிராம் மற்றும் பாஸ்சிம் மேதினிபூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குர்மி அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குர்மி சமூகத்தினர் தற்போது ஓபிசி என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News