இந்தியா

வயநாடு அருகே 'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது அணைக்குள் பாய்ந்த ஜீப்- அத்துமீறி செயல்பட்ட 5 பேர் கைது

Published On 2025-06-30 10:56 IST   |   Update On 2025-06-30 10:56:00 IST
  • வீடியோ எடுப்பவர்களில் பலர், வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
  • கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அம்பலவயல் நெல்லராச்சல் என்ற பகுதியில் அணை ஒன்று இருக்கிறது.

திருவனந்தபுரம்:

'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூகவலை தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில், அதுபோன்ற வலை தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் அதிகமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அப்படி வீடியோ எடுப்பவர்களில் பலர், வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படி செயல்பட்டு அசம்பாவிதம் மற்றும் விபத்தில் சிக்குபவர்கள் ஏராளம். அப்படித்தான் ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அம்பலவயல் நெல்லராச்சல் என்ற பகுதியில் அணை ஒன்று இருக்கிறது. அந்த இடத்திற்கு வாலிபர்கள் சிலர் தடையை மீறி ஜீப்பில் சென்றனர். அவர்கள் 'ரீல்ஸ் வீடியோ' எடுப்பதற்காக அணைக்கு அருகில் உள்ள செங்குத்தான பகுதியில் தங்களின் ஜீப்பை ஓட்டிச் சென்றனர்.

அப்போது அவர்களது ஜீப், கட்டுப்பாட்டை இழந்து அணைக்குள் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் ஜீப்பில் இருந்த வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நள்ளிரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அதுபற்றி யாருக்கும் தெரியவில்லை.

அதே நேரத்தல் வாலிபர்கள் நள்ளிரவில் அணைப் பகுதிக்குள் காரில் சென்றதை பார்த்த சிலர், மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது தான், 'ரீல்ஸ் வீடியோ' எடுக்க முயன்றபோது வாலிபர்களின் ஜீப் அணைக்குள் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், அணையில் மூழ்கிக்கிடந்த ஜீப்பை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட அணைப் பகுதிக்குள் வாகனத்தில் அத்துமீறி சென்றது மட்டுமின்றி, ஆபத்தான முறையில் 'ரீல்ஸ் வீடியோ' எடுத்த பயீஸ், முகம்மது ரஹீன், முகம்மது நிஜாஸ், முகம்மது ஷாபி, முகம்மது ஷானிப் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த இடத்தில் சமீபத்தில் இதேபோன்று டிராக்டர் ஒன்று கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News