இந்தியா

காங்க்ராவில் உள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு

Published On 2023-05-15 14:06 IST   |   Update On 2023-05-15 14:06:00 IST
  • மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
  • விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ரூ.25 ஆயிரத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மஷாலா அருகே 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்திலேய 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கோதுமை ஏற்றிச் சென்ற லாரி, உததாகரன் பஞ்சாயத்து அருகே சாலை வழியாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சுனில் காந்த், அவரது மனைவி சீதா தேவி, மகள் த்ரிஷா தேவி, ஆர்த்தி மற்றும் மிலாப் சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் தாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்ததோடு, உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ரூ.25 ஆயிரத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

Tags:    

Similar News