இந்தியா

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு 3 மாத குழந்தை உயிரிழப்பு

Published On 2025-09-01 14:24 IST   |   Update On 2025-09-01 14:24:00 IST
  • ஓமசேரியை சேர்ந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது.
  • அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் அரிய வகை நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் வாழக்கூடிய அமீபாக்கள், அதில் குளிக்கக்கூடியவர்களின் மூக்கு துவாரத்தின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை தாக்குவதன் மூலம் இந்த காய்ச்சல் பாதிப்பு வருகிறது.

கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி முதன் முதலாக கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அந்த தொற்று பாதிப்பு சிறுமியின் சகோதரனான 7 வயது சிறுவன் உள்பட 8 பேருக்கு கண்டறியப்பட்டது.

அவர்களுக்கு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 3 மாத குழந்தையும் அடங்கும். ஓமசேரியை சேர்ந்த அந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது. அந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து ஆஸ்பத்திரியில் ஒரு மாத மாக சிகிச்சை பெற்று வந்த 52 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்தார். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி வாந்தி-காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்த அந்த பெண், கடந்த மாதம் 4-ந்தேதி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், உடல்நலம் தேறியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் கடந்த மாதம் 26-ந்தேதி மீண்டும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டார். இதனால் மீண்டும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை இன்று அதிகாலை இறந்தது. அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்திருப்பது, கேரளா மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் இருவரையும் சேர்த்து அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News