இந்தியா
சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள்: காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக் கொலை

Published On 2022-06-02 07:33 GMT   |   Update On 2022-06-02 09:11 GMT
இந்த தாக்குதல்களில் கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குல்காம்:

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 12ம் தேதி புத்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பட் என்பவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானார். 

அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த ஆசிரியை ரஜ்னி பாலா என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இவரை பள்ளி கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் அவரை சுட்டு விட்டு தப்பிச்சென்றனர். அதேபோல டிவி நடிகை ஒருவரும் அவரது வீட்டிற்கு வெளியே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல்களில் கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் எல்லாகுவாய் தெஹாதி வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் மேலாளராக விஜய் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் மீது இன்று பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
Tags:    

Similar News