இந்தியா
ராகுல் காந்தி

தீவிர பணவீக்கத்திற்கு எதிராக போராடும் இந்திய குடும்பங்கள்... எல்.பி.ஜி. விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

Published On 2022-05-07 10:46 GMT   |   Update On 2022-05-07 10:46 GMT
சாமானிய மக்களின் பாதுகாப்பிற்காக காங்கிரஸ் போட்டிருந்த அனைத்து பாதுகாப்பு வலைகளையும் நரேந்திர மோடி அரசு அகற்றிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்ததால் அத்தியாவசிய பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டன. ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு சிலிண்டர் விலை 1015 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒரு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.414 ஆக இருந்தது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.827 மானியமாக வழங்கப்பட்டது. இன்று 999 ரூபாயாக உள்ளது. மானியமோ ஜீரோ. 

சாமானிய மக்களின் பாதுகாப்பிற்காக காங்கிரஸ் போட்டிருந்த அனைத்து பாதுகாப்பு வலைகளையும் நரேந்திர மோடி அரசு அகற்றிவிட்டது. 

இன்று கடுமையான பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு எதிராக ஆகியவற்றிற்கு எதிராக கோடிக்கணக்கான இந்திய குடும்பங்கள் போராடி வருகிறார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், 2014-ம் ஆண்டில் மானிய விலை சிலிண்டரின் விலை எந்த அளவுக்கு இருந்ததோ அதே விலைக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்  ரன்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News