இந்தியா
மத்திய மந்திரி மகன் கோர்ட்டில் ஆஜரானார்

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய மந்திரி மகன் கோர்ட்டில் ஆஜரானார்- மீண்டும் சிறையில் அடைப்பு

Published On 2022-04-25 09:55 GMT   |   Update On 2022-04-25 09:55 GMT
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி மகன் ஆசிஷ் மிஸ்ரா மாவட்ட சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியின்போது அங்கு சென்ற பா.ஜனதாவினர் கார்களில் ஒன்று மோதியது. கார் மோதியது மற்றும் அதை தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியானார்கள்.

பா.ஜனதாவினர் சென்ற கார்களில் ஒன்றில் மத்திய இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்மிஸ்ரா இருந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி அஜய்மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆசிஷ்மிஸ்ரா ஜாமீன் கேட்டு அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி 10-ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 4 மாத சிறைக்கு பிறகு அவர் வெளியே வந்தார்.

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், வக்கீல்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் சூர்யகாந்தி, ஹிமாகோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது.

இந்த நிலையில் லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 18-ந்தேதி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் ஒரு வாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி ஆசிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கெரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு இன்று முடிவடையும் நிலையில் அவர் சரண் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து ஆசிஷ் மிஸ்ரா மாவட்ட சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தனிச் சிறையில் அடைக்கப்படுவார் என்று ஜெயில் கண்காணிப்பாளர் பி.பி.சிங் கூறினார்.
Tags:    

Similar News