இந்தியா
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூகம்: சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை

Published On 2022-04-18 19:22 GMT   |   Update On 2022-04-18 19:22 GMT
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து 5 மணி நேரம் விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி:

தேர்தல் வியூக நிபுணர்  பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று 2வது முறையாக சந்தித்து பேசினார். 

டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பி சிதம்பரம், முகுல் வாஸ்னிக் மற்றும் அம்பிகா சோனி ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான எதிர்கால வியூகம் குறித்து  ஐந்து மணி நேரம் பிரசாந்த் கிஷோர் நீண்ட விவாதம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசில் உள்ள தற்போதைய நிறுவன அமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது சந்திப்புக் கூட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் வியூகம் குறித்து பிரசாந்த் கிஷோர் விரிவான விளக்கத்தை அளித்திருந்தார். 

அப்போது 370 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள இடங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே. மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோரையும் கட்சியில் சேருமாறு காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News