இந்தியா
நெய்

திருப்பதியில் ரூ.3 கோடியில் நெய் தயாரிப்பு மையம்

Update: 2022-04-16 06:19 GMT
மும்பையை சேர்ந்த ஆப்கன் நிறுவனம் ரூ.3 கோடி செலவில் நெய் தயாரிக்கும் மையத்தை உருவாக்கி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக தர உள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கோசாலையில் இருந்து பெறப்படும் பால் மூலம் வெண்ணெய் எடுத்து நெய் தயாரித்து ஏழுமலையான் கைங்கர்யத்திற்கு பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்காக திருமலையில் உள்ள கோசாலை அருகில் தனி மையத்தையும் ஏற்படுத்த உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். மும்பையை சேர்ந்த ஆப்கன் நிறுவனம் ரூ.3 கோடி செலவில் இந்த நெய் தயாரிக்கும் மையத்தை உருவாக்கி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக தர உள்ளது.

கோசாலையில் இருந்து கிடைக்கும் 4 ஆயிரம் லிட்டர் பால் மூலம் 60 கிலோ நெய் தயாரிக்க முடியும்.

மேலும் வெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் மோரை திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்திற்கு அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது தேவஸ்தானம் இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்து வரும் நிலையில் அதில் ஒரு பாகமாக இந்த நெய் தயாரிப்பை மேற்கொண்டுள்ளது.

ஏழுமலையான் கைங்கர்யத்திற்கு தினமும் 60 கிலோ நெய் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News