இந்தியா
சுப்ரீம் கோர்ட்

தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா உருமாற்றம் அடைகிறது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

Published On 2022-03-22 13:24 IST   |   Update On 2022-03-22 13:24:00 IST
கொரோனா வைரஸ் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நாங்கள் தடுப்பூசியை கட்டாயமாக்கி இருக்கிறோம்.

புதுடெல்லி:

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வக்கீல் வாதாடுகையில், “தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது என்பது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு இருக்கக் கூடிய அதிகாரம்தான். அது மட்டுமல்லாமல் ஒரு பேரிடர் ஏற்படும் போது அதனை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பது மாநில அரசுகளுக்கு இருக்கக் கூடிய அதிகாரம்.


எனவே அதனை பயன்படுத்தித்தான் நாங்கள் தடுப்பூசியை கட்டாயமாக்கி இருக்கிறோம்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “கட்டாயமாக்கி இருக்கிறது என்றால் அதற்கு என்ன பொருள்” என்று கேட்டார்.

அதற்கு தமிழக அரசு வக்கீல் பதில் அளிக்கையில், “தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவது தடை செய்யப்படுகிறது. இதுதான் கட்டாயமாக்கியதற்கான விளக்கம். கட்டாயமாக்கியது ஏன் என்றால் தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா வைரஸ் உருமாறுகிறது என்று நிபுணர்கள் அறிவுரை சொல்லி இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் கொரோனா வைரஸ் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நாங்கள் தடுப்பூசியை கட்டாயமாக்கி இருக்கிறோம்.

அதே நேரத்தில் மாநில அரசுகள் அனைத்தும் 100 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை சொல்கிறது.

எனவே நாங்கள் இதனை கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமை இருக்கிறது. மத்திய அரசு கூட கொரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி இருக்கிறது” என்றார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதையும் படியுங்கள்... மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Similar News