இந்தியா
மம்தா பானர்ஜி, சுகந்தா மஜும்தார்

மத்தியில் மாற்று அணி இல்லாததால் பாஜக இன்னும் ஆட்சியில் உள்ளது - மம்தா பானர்ஜி கருத்து

Published On 2022-03-08 14:54 GMT   |   Update On 2022-03-08 14:54 GMT
பாஜகவுக்கு எதிராக புதிய அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைவரும்,மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்று அணி இல்லாததால் மத்தியில் பாஜக இன்னும் ஆட்சியில் உள்ளதாக கூறியுள்ளார். பாஜகவினர் ஜனநாயகத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றும், மாற்று சக்தியை உருவாக்க மற்ற எதிர்க்கட்சிகளுடன் திரிணாமுல் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் நாளில் பாஜக அகற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மம்தா பானர்ஜி கருத்துக்கு, மேற்கு வங்க மாநில பாஜக தலைவர்  சுகந்தா மஜும்தார் பதிலடி கொடுத்துள்ளார். 

மத்தியில் பாஜக அரசை வீழ்த்தும் இவ்வளவு பெரிய இலக்கு அவர்களின் (திரிணாமுல்) ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவர் (மம்தா பானர்ஜி) மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவார் என்று அர்த்தமல்ல. அவர்களை தோற்கடிப்போம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News