இந்தியா
பிரதமர் மோடி

கோ பேக் மோடி- புனேயில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்

Published On 2022-03-06 10:48 GMT   |   Update On 2022-03-06 10:48 GMT
பிரதமர் மோடி புனேயில் நிறைவடையாத திட்டப் பணிகளை துவக்கி வைத்து மக்களை ஏமாற்றுவதாக நகர காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார்.
புனே:

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு இன்று வந்தார். அவரது வருகைக்கு புனே நகரில் உள்ளூர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவண்ணம் உள்ளனர். 

பிரதமர் மோடி வரும் சாலையில் அணிவகுத்து நின்றபடி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை காட்டினர். கோ பேக் மோடி என்று எழுதப்பட்ட பதாகைகளையும் காட்டி முழக்கமிட்டனர். இது தொடர்பான ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மற்ற மாநிலங்களுக்கு கொரோனா பரவுவதை மகாராஷ்டிர மாநிலம் ஊக்குவித்ததாக பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் கூறியதன்மூலம், மகாராஷ்டிராவை அவமதித்தார் என்று புனே நகர காங்கிரஸ் தலைவர் ரமேஷ் குற்றம்சாட்டினார். மேலும், மோடி தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் இங்கிருந்து திரும்பி போகவேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

புனேயில் நிறைவடையாத திட்டப் பணிகளை மோடி துவக்கி வைத்து மக்களை ஏமாற்றுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் விமர்சித்தார்.

பிரதமரால் தொடங்கி வைக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையின் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News