இந்தியா
மாணவர்கள்

உக்ரைன் சுமி நகரில் சிக்கி தவிக்கும் 700 இந்திய மாணவர்கள் 600 கி.மீ. நடந்து செல்ல முடிவு

Published On 2022-03-06 11:50 IST   |   Update On 2022-03-06 12:15:00 IST
உக்ரைன் சுமி நகரில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் 600 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவு செய்துள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அவசரப்பட்டு வெளியேற வேண்டாம் என்று அவர்களை வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களை பயணிகள் விமானம் மற்றும் இந்திய விமானப்படை மூலம் மத்திய அரசு தொடர்ந்து மீட்டு வருகிறது.

அங்குள்ள சுமி நகரில் ரஷியா-உக்ரைன் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இந்திய மாணவர்கள் 700 பேர் அந்த நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள்.

இந்த போரால் அவர்கள் சுமி நகரில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி இந்திய அதிகாரிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.

உயிரை காப்பாற்றுவதற்காக 700 இந்திய மாணவர்களும் பதுங்கு குழிகளிலும், தங்கும் விடுதியில் உள்ள தரைதளத்திலும் பதுங்கி இருந்தனர். கடுமையான குளிர், உணவு பற்றாக்குறையால் அவர்கள் துன்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

பனிக்கட்டியை உருக வைத்து குடிநீருக்காக பயன்படுத்தும் நிலை உள்ளது. அவர்கள் தற்போது அங்குள்ள மாகாண பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக அவர்கள் மின்சாரம், தண்ணீர் இல்லாமல் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகி தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதில் கிழக்கு உக்ரைன் நகரமான சுமியில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள ரஷிய எல்லைக்கு நடந்து செல்லப்போவதாகவும், எல்லையில் தங்களை அதிகாரிகள் மீட்டு அழைத்து செல்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் மற்றொரு வீடியோவில் மாணவர்கள், சுமி நகரில் இருந்து தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகருக்கு 600 கி.மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாங்கள் அச்சம் அடைந்துள்ளோம். நீண்ட நாட்கள் இங்கு காத்திருந்தோம். இனியும் இருக்க முடியாது. எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாங்கள் நடந்தே செல்ல இருக்கிறோம். எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அரசும், இந்திய தூதரகமுமே பொறுப்பு என்று மாணவர்கள் கூறி இருந்தனர்.

மரியுபோல், வோல்னோ வாகா ஆகிய 2 நகரங்களில் மீட்பு பணிக்காக ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் அங்கு சென்று அங்கிருந்து திரும்பி விடலாம் என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

மாணவர்கள் 600 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவு செய்துள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அவசரப்பட்டு வெளியேற வேண்டாம் என்று அவர்களை வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுமியில் உள்ள இந்திய மாணவர்களின் நிலையை அறிந்து மிகுந்த கவலை அடைந்துள்ளோம். மாணவர்களை மீட்கும் வகையில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்குவதற்காக உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ரஷிய-உக்ரைன் அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.

மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கி இருக்குமாறும் தேவையற்ற அபாயத்தை எதிர்கொள்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து மாணவர்களில் ஒரு குழுவினர் தங்களது பயணத்தை நிறுத்தி உள்ளனர்.

சுமி மாகாண பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் ஏற்கனவே இங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டோம். ஆனால் இப்போது புதிய அறிவுறுத்தலால் நாங்கள் தேவையற்ற அபாயத்தில் சிக்க வேண்டுமா? என குழப்பம் அடைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

உக்ரைனுக்கான இந்திய தூதர் பார்த்தா சத்பதி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 வாரங்கள் எங்களுக்கு கடுமையான சவாலாக இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் மாணவர்கள் வெளிப்படுத்திய முதிர்ச்சி, துணிவை கண்டு பெருமைப்படுகிறேன்.

இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பையும் தவற விடமாட்டோம். இன்னும் சிறிது பொறுமையுடன் இருக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் உங்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Similar News