இந்தியா
கோப்புப்படம்

5 மாநில சட்டசபை தேர்தல்- உத்தரகாண்ட், கோவாவில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Published On 2022-02-14 12:05 IST   |   Update On 2022-02-14 12:05:00 IST
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காணொலி காட்சிகள் மூலமாகவும் பிரசாரம் நடைபெற்றது. பா.ஜ.க.வினர் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்திருந்தனர்.
டேராடூன்:

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. வாக்களர்கள் ஆர்வமுடன் வருவதால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.

2-ம் கட்டமாக இன்று 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தல் களத்தில் 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.01 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இன்று தங்கள் வாக்கை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 2 மணி நேரத்தில் 55 தொகுதிகளிலும் சராசரியாக சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

5 மாநில சட்டசபை தேர்தலில் இன்று கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘வாக்காளர்கள் திரண்டு வந்து அதிகமாக வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

70 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி இன்று காலை 7 மணிக்கு அங்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து விட்டனர். இதனால் உத்தரகாண்ட் தேர்தல் ஓட்டுப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிக விறுவிறுப்புடன் காணப்படுகிறது. காலை 9 மணிநிலவரப்படி 5.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி களத்தில் இருந்தாலும் அது கணிசமான வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த மாநிலத்தில் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவை சுமூகமாக நடத்துவதற்காக 36 ஆயிரம் போலீசாரும், துணை நிலை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக அந்த மாநிலத்தில் அனல் பறக்கும் வகையில் தேர்தல் பிரசாரம் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களில் பிரியங்கா மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் மிக கடுமையாக பா.ஜ.க.வை தாக்கி பேசினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடியின் பிரசாரம் அமைந்திருந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காணொலி காட்சிகள் மூலமாகவும் பிரசாரம் நடைபெற்றது. பா.ஜ.க.வினர் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்திருந்தனர். எனவே மீண்டும் உத்தரகாண்ட்டில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

40 சட்டசபை தொகுதிகளை கொண்ட கோவாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த மாநிலத்திலும் மக்கள் மத்தியில் ஆர்வம் காணப்படுவதால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக உள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி 11.04 வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலை விட இந்த தடவை கோவாவில் அதிக வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் 301 வேட்பாளர்கள் உள்ளனர்.

கோவா மாநிலத்தில் மொத்த வாக்காளர்களே சுமார் 11 லட்சம் பேர்தான். அவர்களது ஆதரவை பெற பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரம் செய்தன.

ராகுல், பிரியங்கா இருவரும் கோவா மாநிலத்துக்கு நேரடியாக சென்று ஆதரவு திரட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் மாநிலங்களுக்கு அடுத்த படியாக கோவா மாநிலத்தில் கவனத்தை செலுத்தி உள்ளது.

அங்கு அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மொத்தம் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை களம் இறங்கி இருக்கிறது. டெல்லி மாடல் அரசை கோவாவிலும் கொண்டு வருவோம் என்று ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்து பிரசாரத்தில் ஈடு பட்டார்.

மம்தா பானர்ஜியும் கோவா தேர்தலில் தீவிர கவனம் செலுத்தினார். தலைவர்களின் முற்றுகை காரணமாக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெற்றி-தோல்வி மாறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது கோவாவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறது. மார்ச் 7-ந்தேதி உத்தரபிரதேசத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. அதன் பிறகு மார்ச் 10-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

Similar News