இந்தியா
கோப்பு படம்

முகக்கவசம் என்பது காரில் சீட் பெல்ட் அணிவதற்கு சமமானது- சுகாதார நிபுணர்கள் கருத்து

Published On 2022-02-12 11:32 IST   |   Update On 2022-02-12 12:45:00 IST
முகக்கவசம் தொடர்ந்து அணிவது அவசியமானது, பாதுகாப்பானது என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமானது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து உள்பட உலகின் பல நாடுகள் முகக்கவசம் அணியாமல் இருக்க மக்களுக்கு அனுமதி அளித்துள்ளன. இது எப்படி சாத்தியம் என்று தகவல் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவை கேட்டுள்ளன.

முகக்கவசத்தில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மராட்டிய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முகக்கவசம் தொடர்ந்து அணிவது அவசியமானது, பாதுகாப்பானது என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

 


இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்கள் மற்றும் சில நாடுகள் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளன. ஆனால் இது உலக அளவில் இருக்க முடியாது.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் சுகாதார பாதுகாப்பு அமைப்புகள், பொது போக்குவரத்து மற்றும் பராமரிப்பு இல்லங்களில் முகக்கவசம் அணிவதை இன்னும் பரிந்துரைக்கிறது.

தொற்று நோய் எப்போது குறையும் அல்லது முற்றிலும் ஒழிந்துவிடுமா? என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. மேலும் கொரோனா உருமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பை முற்றிலும் நிராகரிக்க முடியாது.

இதனால் முகக்கவசம் தொடர்ந்து அணிவது அவசியமாகிறது. முகக்கவச பயன்பாடு பாதுகாப்பானது. முகக்கவசம் என்பது காரில் சீட் பெல்ட் அணிவதற்கு சமமானது.

கொரோனா மட்டுமின்றி காற்றினால் பரவக்கூடிய சில நோய்களுக்கும் பாதுகாப்பானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையும் படியுங்கள்... தொடர்ந்து சரியும் 3-ம் அலை: கொரோனா ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரமாக குறைந்தது

Similar News