இந்தியா
வனப்பகுதியில் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் - ரூ.20 லட்சம் செம்மரம் கடத்திய 4 பேர் கைது
நாராணபள்ளி கிராமத்தில் வனப்பகுதியில் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து 455 கிலோ எடை கொண்ட 20 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
கடப்பா மாவட்டம் அங்குல நாராணபள்ளி கிராமத்தில் வனப்பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வனப்பகுதியில் இருந்த சிலர் செம்மரக்கட்டைகளை தோளில் சுமந்து கொண்டு வந்து மினி லாரி, காரில் ஏற்றி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசாரை பார்த்ததும் கடத்தல் கும்பல் செம்மரங்களை ஆங்காங்கே வீசிவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீசார் மீது அவர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 455 கிலோ எடை கொண்ட 20 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி, காரை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய கும்பலை பிடிக்க போலீசார் வனப்பகுதியில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.