இந்தியா
ஒயின் பாட்டில்கள்

ஒயின் என்பது மது கிடையாது - சிவசேனா எம்.பி கருத்து

Published On 2022-01-29 17:25 GMT   |   Update On 2022-01-29 17:25 GMT
ஒயின் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ‘ஒயின்’ வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது. 

அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்யலாம். இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம். 

இந்த கடைகளில் பீர் போன்ற பிற மது வகைகள் விற்பனைக்கு இல்லாமல் ஒயின் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அங்கு விற்பனை செய்யப்படும் ஓயின் வகைகளில் ஆல்கஹாலின் அளவு மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும்.

அதேபோன்று பள்ளி, வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசின் இந்த உத்தரவை எதிர்கட்சியான பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மதுபான தொழிலின் மீதான காதல் காரணமாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார். 



இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக பேசிய சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத், சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்யப்படுவது மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க உதவும். மேலும் ஒயின் என்பது மது கிடையாது என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து மும்பை காவல்துறையை குறிப்பிட்டு ட்விட்டர் பயனர் ஒருவர், ‘அப்போது நாங்கள் ஒயின் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இனி எங்களை கைது செய்ய மாட்டீர்களா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை அவ்வாறு செய்தால் கைது செய்துவிடுவோம் என எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News