இந்தியா
கோவா அமைச்சர் பதவியில் இருந்து விலகிய மைக்கேல் லோபோ

கோவா அமைச்சர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ விலகல்

Published On 2022-01-10 06:43 GMT   |   Update On 2022-01-10 06:43 GMT
எம்எல்ஏ பதவி மற்றும் பா.ஜ.க.வில் இருந்தும் விலகி உள்ளதாக,மைக்கேல் லோபோ குறிப்பிட்டுள்ளார்.
கோவா:

கோவாவில் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், கோவா பார்வர்டு கட்சி , மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி , ஆம் ஆத்மி கட்சி , திரிணாமுல் காங்கிரஸ், என்சிபி ஆகியவை களம் காண்கின்றன.

இந்த நிலையில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க.  அமைச்சரவையில் இருந்து அம்மாநில  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கழிவு மேலாண்மைத்துறை அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ விலகியுள்ளார். 

தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகம் மற்றும் கோவா சட்டசபை சபாநாயகரிடம் அவர் சமர்ப்பித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

கலங்குட் தொகுதி மக்கள் எனது முடிவை மதிப்பார்கள் என்று நம்புகிறேன். நானும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டேன். பா.ஜ.க.வில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று பார்க்கலாம். மற்ற அரசியல் கட்சிகளுடன் பேசி வருகிறேன். எங்களை அவர்கள் பார்க்கும் விதத்தில் நான் வருத்தமடைந்தேன்.  

கோவா பா.ஜ.க.வில், மனோகர் பாரிக்கரின் பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. அவருக்கு ஆதரவளித்த கட்சிக்காரர்கள் பா.ஜ.க.வால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  இதனிடையே மைக்கேல் லோபோ இன்று காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  
Tags:    

Similar News