இந்தியா
பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் திடீர் ரத்து

Published On 2022-01-05 15:19 IST   |   Update On 2022-01-05 15:19:00 IST
போராட்டம் நடைபெற்றதால் பிரதமர் மோடி செல்லும் வாகனம் சாலையிலேயே 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தது.
சண்டிகர்

பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். 

இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்க இருந்தார். 

இதற்காக பஞ்சாப் சென்ற மோடி, பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு முன் ஹுசைனி வாலாவிற்கு ஹெலிக்காப்டர் மூலம் சென்று அங்குள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருந்தார். ஆனால் மழை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.



பிரதமர் மோடியின் வாகனம், ஹுசைனி வாலாவில் இருந்து 30 கி.மீ தூரத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரதமர் செல்லும் வாகனம் 20 நிமிடங்கள் வரை சாலையிலேயே காத்திருந்தது. 

இதையடுத்து பஞ்சாப் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு பிரதமர் மீண்டும் டெல்லி திரும்பினார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் வருகை சரியாக திட்டமிடப்பட்டு பஞ்சாப் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பஞ்சாப் அரசு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இதனால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தானது. இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News