இந்தியா
சபரிமலை

சபரிமலையில் டிஜிட்டல் சேவை- கேரள அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை

Published On 2021-12-13 14:31 IST   |   Update On 2021-12-13 14:31:00 IST
சபரிமலை கோவிலில் முதல்கட்டமாக பக்தர்கள் காணிக்கை செலுத்த இ-உண்டியல் வசதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை திருவிழா நடந்து வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசித்து செல்கிறார்கள்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் பாரம்பரிய பாதையான நீலிமலை பாதை நேற்று திறக்கப்பட்டது. இந்த பாதை வழியாக பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பி சன்னிதானம் சென்றனர்.

இதற்கிடையே சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும், அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவினர் திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்படும் நிர்வாக நடைமுறைகளை பார்வையிட்டனர்.



அப்போது திருப்பதி கோவிலில் பல்வேறு வசதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து திருப்பதி கோவிலில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் சேவைகளை சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் ஏற்படுத்த உயர்மட்ட குழு அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது.

இதன் முதல்கட்டமாக சபரிமலை கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த இ-உண்டியல் வசதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனக்கூறப்பட்டு உள்ளது.


Similar News