செய்திகள்
கணேஷ் சங்கர் பாண்டே

சொத்து கேட்டு மகன் தொல்லை- அதிரடி முடிவெடுத்த வியாபாரி

Published On 2021-11-30 04:39 GMT   |   Update On 2021-11-30 05:58 GMT
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சொத்து கேட்டு தொல்லை கொடுத்த மகனுக்கு பதிலடியாக தந்தை செய்த செயல் அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆக்ரா:

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிபல்மண்டி நிரலாபாத் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கர் பாண்டே (வயது 83). புகையிலை வியாபாரம் செய்து வரும் இவருக்கு அந்த பகுதியில் சுமார் ரூ.2½ கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவரின் மூத்த மகன் திக் விஜய், சொத்தில் ஒரு பகுதியை தனக்கு எழுதி தருமாறு அவரிடம் கேட்டு வந்தார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென்று தனது கோடிக்கணக்கான சொத்துகள் முழுவதையும் ஆக்ரா நீதிபதி பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதுபற்றி கணேஷ் சங்கர் பாண்டே கூறும்போது, ‘எனது மூத்த மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து என்னிடம் சொத்துகளை கேட்டு வந்தார். அவர் என்னை மதிப்பதில்லை. என் வார்த்தைகளை கேட்பதில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஆக்ரா மாவட்ட நீதிபதி பெயரில் சொத்துகளை எழுதி வைத்து விட்டேன். எனது மரணத்துக்கு பிறகு அரசு இதை பயன்படுத்தி கொள்ள முடியும்’ என்றார்.

மகன் பிரச்சினைக்காக சொத்துகளை நீதிபதி பெயருக்கு எழுதி வைத்திருப்பது, அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



Tags:    

Similar News