செய்திகள்
உத்தவ் தாக்கரே

ஒமிக்ரான் வைரசை தடுக்க தீவிர நடவடிக்கை எடுங்கள்: அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு

Published On 2021-11-29 02:43 GMT   |   Update On 2021-11-29 02:43 GMT
முககவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட அரசின் தடுப்பு விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து இருந்தது.
மும்பை :

கொரோனா வைரஸ் தொற்று தோன்றி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் அந்த கொடிய வைரஸ் உலக நாடுகள் மீதான தனது கோரப்பிடியை தளர்த்தவில்லை. ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. எனினும் தடுப்பூசி எனும் பெரும் ஆயுதம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது. தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து, இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.

இந்தநிலையில் மராட்டியத்தில் புதிய வகை வைரசால் பாதிப்பு ஏற்படுவதை மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பரவலை தடுக்க புதிய அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள் வெளியிடப்பட்டது.

முககவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட அரசின் தடுப்பு விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து இருந்தது.

இந்தநிலையில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தற்போது மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரம், மற்றும் ஒமிக்ரானை மராட்டியத்திற்குள் வரவிடாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அப்போது அவர், "புதிய வகை ஆட்கொல்லி வைரஸ் வராமல் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்காமல் வேலையை உடனே தொடங்குகள்" என்றார். மேலும் அவர், "மாநிலத்தில் மீண்டும் ஒரு லாக்டவுன் வராமல் இருக்க பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்." என்றார்.

இதேபோல விமான நிலையங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.
Tags:    

Similar News