செய்திகள்
இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கோரி போராட்டம்

பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வரவேண்டும்- அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

Published On 2021-11-28 11:04 GMT   |   Update On 2021-11-28 11:04 GMT
பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகள் தங்கள் யோசனைகளை முன்வைத்தன. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரவேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என அக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூறினர். பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாநிலங்களவையில் 2010ம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேறியது. 

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது.  இந்த ஆண்டாவது மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags:    

Similar News