செய்திகள்
சித்தூர் அடுத்த மதனபள்ளியில் பலத்த மழையால் சேதமடைந்த தக்காளி செடிகள்.

ஆந்திராவில் மழை சேதம்- ரூ.1000 கோடி நிவாரணம் கேட்டு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

Published On 2021-11-25 05:31 GMT   |   Update On 2021-11-25 05:31 GMT
மழை வெள்ளம் பாதித்த இடங்களை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி சேதங்களை பார்வையிட வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி:

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.

இதன் காரணமாக மேலும் அதிக அளவு மழை பெய்தது. இதனால் சித்தூர், கடப்பா, நெல்லூர், ஆனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.

மேலும் ஆட்கள், கால்நடைகள், வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள் சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. இதனால் ஆந்திர மாநில அரசுக்கு ரூ.6,054 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 18,19-ந் தேதிகளில் சித்தூர் கடப்பா நெல்லூர் அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலத்த சேதமடைந்துள்ளது.

மழை வெள்ளம் பாதித்த இடங்களை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி சேதங்களை பார்வையிட வேண்டும். தற்போது ஆந்திர மாநில அரசுக்கு வெள்ள சேத நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலியாகியுள்ளனர். 25 பேரை இதுவரை காணவில்லை. திருப்பதி, திருமலை, நெல்லூர், மதனபள்ளி, ராஜம்பேட்டை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் 196 மண்டலங்கள் 1,402 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன.

69,196 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடப்பாவில் உள்ள அன்னமய்யா அணை சேதமடைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த 1434 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் 42,999 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 1,887 கிலோமீட்டர் சாலைகளும், 59.6 கிலோமீட்டர் தூரம் குடிநீர் பைப் லைன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

71 அரசுப் பள்ளிகளும் 2,054 கிலோமீட்டர் கிராம சாலைகளும் சேதமடைந்துள்ளது. மேலும் வரும் 27, 28-ந் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உடனடியாக மத்திய அரசு ஆய்வுக் குழுவை அனுப்பி வைத்து சேதங்களை பார்வையிட வேண்டும் என கூறியிருந்தார்.
Tags:    

Similar News