செய்திகள்
நானா படோலே

7 மாதத்தில் மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடியை பறித்துள்ளது: நானா படோலே குற்றச்சாட்டு

Published On 2021-11-18 02:08 GMT   |   Update On 2021-11-18 02:08 GMT
மாநிலத்தில் எரிபொருள் மீதான விலையை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மும்பை :

மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளையடிப்பதுடன், வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்த முயற்சி செய்வதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்தி வைத்ததன் மூலம் மராட்டிய அரசுக்கு மத்திய அரசு முதல் அடி கொடுத்தது.

இந்தநிலையில் மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்க, எரிபொருள் மீது மத்திய அரசு பல்வேறு வடிவங்களில் செஸ் வரி விதித்தது.

இதன்மூலம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வரை மாநில அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் தட்டிபறிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயை குறைக்க பல்வேறு சட்ட வழிமுறைகள் மற்றும் நிர்வாக ரீதியான ஓட்டைகளை பயன்படுத்தி உள்ளது.

இதுபோன்ற செஸ் வரி இல்லை என்றால் மராட்டிய அரசின் கருவூலத்தில் அந்த பணம் சேர்க்கப்பட்டு இருக்கும். இது பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும் பயன்படுத்தி இருக்கலாம்.

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

மாநிலத்தில் எரிபொருள் மீதான விலையை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு ஏற்கனவே மதிப்பு கூட்டு வரியை(வாட்) குறைத்துள்ளது. முதல்-மந்திரி அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்து வருவதால் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.

விரைவில் அவரை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News