செய்திகள்
ரன்தீப் சுர்ஜேவாலா

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு- காங்கிரஸ் எதிர்ப்பு

Published On 2021-11-15 04:41 GMT   |   Update On 2021-11-15 04:41 GMT
மோடி அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை ஸ்திரமின்மை ஆக்குவதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  வினீத் நரேன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் நிலையாக அந்த பதவியில் நீடிக்கிறார்கள். தற்போது, கொண்டுவந்துள்ள அவசர சட்டங்களால், கூடுதலாக 3 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு வழங்க முடியும். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடி அரசாங்கம் அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை ஸ்திரமின்மை ஆக்குவதற்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை உதவியாளர்களாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார். 

எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ரெய்டு நடத்துகிறது. இப்போது, இந்த உதவியாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் வழங்கப்பட்டு, வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கு தீங்கிழைக்கும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் சுர்ஜேவாலா கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும் இந்த அவசர சட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பாக கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News