செய்திகள்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லியை மிரட்டும் காற்று மாசு- பள்ளிகளை மூட அரசு உத்தரவு

Published On 2021-11-13 22:09 IST   |   Update On 2021-11-13 22:09:00 IST
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அனைத்து கட்டுமான பணிகளும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு திட்டம் குறித்து விளக்கிய அவர், ஒரு வாரத்திற்கும் மேலாக மூடியிருக்கும் நச்சு புகையை எதிர்த்து டெல்லி போராடி வருவதால், பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமை முதல் ஒருவாரத்திற்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தவேண்டும் என உத்தரவிட்டார். இதனால் குழந்தைகள் அசுத்தமான காற்றை  சுவாசிக்க வேண்டிய நிலை இருக்காது என்றார்.

‘அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவேண்டும். இதற்கான உத்தரவு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்களும், முடிந்தவரை வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும்படி அறிவுறுத்தப்படும். 

கட்டுமானப் பணிகள் காற்றில் உள்ள தூசி மற்றும் நுண்ணிய மாசுபாடுகளுக்கு காரணமாக இருப்பதால், அனைத்துவித கட்டுமான பணிகளும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது’ என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
Tags:    

Similar News