செய்திகள்
பணம்

திருடிய பணம்-நகைகளை மொத்தமாக வைத்து சென்ற கொள்ளையன்

Published On 2021-11-06 15:20 IST   |   Update On 2021-11-06 16:11:00 IST
கொரோனா காலத்தில் வேறு வழியின்றி பல வீடுகளில் திருடியதாகவும், செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் கொள்ளையன் கடிதம் எழுதியுள்ளான்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக பரியாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை வலைவீசி தேடி வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த அ‌ஷரப் என்பவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய், ஒரு சவரன் நகை திருட்டு போனது. இந்த நிலையில் அ‌ஷரப் குடும்பத்தினர் நேற்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தனர்.

அப்போது வாசலில் 3 பெரிய கவர்கள் இருந்தன. அதை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம், 4.5 பவுன் தங்க செயின், 630 மில்லி கிராம் கம்மல், மோதிரம் உள்ளிட்டவையும், ஒரு கடிதமும் இருந்தன.

அ‌ஷரப் குடும்பத்தினர் அந்த கடிதத்தை பிரித்து படித்தனர். அதில், ‘‘கொரோனா காலத்தில் வேறு வழியின்றி பல வீடுகளில் நான் திருடிவிட்டேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். எந்தெந்த வீடுகளில் என்னென்ன பொருட்கள் திருடினேன் என்பதை இந்த கடிதத்தில் விவரமாக எழுதி வைத்துள்ளேன். தயவு செய்து அந்தந்த வீடுகளில் அவர்களுக்கு உரிய பொருட்களை கொடுத்துவிடுங்கள்’’ என்று கூறப்பட்டிருந்தது.

அவை அனைத்தும் பரியாரம் பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டுபோன பணம் மற்றும் நகைகள் ஆகும். அந்த பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் மனம் மாறி அவற்றை அ‌ஷரப் வீட்டின் வாசலில் வைத்து சென்றுள்ளான்.

இதைதொடர்ந்து அ‌ஷரப், அந்த பணம் மற்றும் நகைகளையும் அதில் இருந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவற்றை கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.


Tags:    

Similar News