செய்திகள்
ஆர்யன் கான்

நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வைத்திருந்தாரா?- வெளியான புதிய தகவல்

Published On 2021-10-04 11:46 IST   |   Update On 2021-10-04 11:46:00 IST
நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை:

மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து 25-க்கும் மேற்பட்ட போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் சென்றனர். நேற்று முன்தினம் இரவு நடுக்கடல் அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வினியோகம் நடந்தது.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக ஈடுபட்டு 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர்
ஷாருக்கானின்
மகன் ஆர்யன்கானும் ஒருவர் ஆவார். அவர்கள் 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து மும்பை அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சட்டப்பிரிவுகள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஷாருக்கானின் மகன் ஆர்யன்
மீது போதை பொருளை உட்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து ஆர்யன் போதை பொருள் வைத்திருக்கவில்லை என்று அவரது வக்கீல் கூறினார்.

ஆர்யனை ஜாமினில் விட வேண்டும் என்று இன்று வக்கீல்கள் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விசாரணை முடிந்த பின்னர்தான் ஆர்யனுக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.



இதற்கிடையில் ஆர்யன் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை எங்கு பதுக்கி வைத்திருந்தார் என்று தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்திய போது ஆர்யனின் அனைத்து உடமைகளையும் ஆய்வு செய்தனர். அப்போது ஆர்யன் தனது கண்ணாடி பெட்டியில் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

அதன் பிறகுதான் ஆர்யனின் அனைத்து பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டது. அவரது செல்போனையும் அதிகாரிகள் வாங்கி ஆய்வு செய்தனர். யார்-யாரிடம் அவர் பேசி இருக்கிறார் என்ற தகவல்களையும் சேகரித்தனர். வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட தகவல்களையும் ஆய்வு செய்தனர்.

வாட்ஸ்அப் தகவல்களில் சில போதை பொருள் பயன்பாடு பற்றி இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில்தான் ஆர்யனை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ய நேரிட்டது. வாட்ஸ்அப் தகவல்களை அழிக்காததால் ஆர்யன் சிக்கி உள்ளார்.

அந்த வாட்ஸ்அப் தகவல் மூலம் அவரது தோழிகளுக்கும் வலைவிரிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக கைதான 2 பெண்களிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் நாப்கினுக்குள் போதை பொருட்களை மறைத்து வைத்திருந்தனர். இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Similar News