செய்திகள்
டிரம்பை வழிபடும் புஸ்சா கிரு‌‌ஷ்ணா

தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிலை வைத்து வழிபாடு செய்து வந்த நபர் மாரடைப்பால் மரணம்

Published On 2020-10-11 12:10 GMT   |   Update On 2020-10-11 12:10 GMT
தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சிலை வைத்து வழிபாடு செய்து வந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா (வயது 33). விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவராக திகழ்ந்தார்.

பற்றின் மிகுதியால் அமெரிக்க அதிபர் டிரம்பின் 73-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி தனது வீட்டில் டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைத்தார்.

டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினமும் வழிபட்டு வந்தார். டிரம்ப் சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுவார். மேலும், ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பார். 

அமெரிக்க அதிபருக்கு இந்தியாவில் ஒருவர் சிலை அமைத்து வழிபாடு செய்த நிகழ்வு கடந்த ஆண்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு புஸ்சா கிருஷ்ணா மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், மிடக் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இன்று சென்றிருந்த புஸ்சா கிருஷ்ணா திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து கீழே விழுந்தார். 

இதைப்பார்த்த உறவினர்கள் கிருஷ்ணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கிருஷ்ணாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். கிருஷ்ணாவின் உயிரிழப்பு அவரின் உறவினர்களுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News