செய்திகள்
கொரோனா வைரஸ்

கர்நாடகத்தில் கடந்த 6 மாதத்தில் கொரோனாவுக்கு 110 ஆசிரியர்கள் உயிரிழப்பு

Published On 2020-09-13 04:19 IST   |   Update On 2020-09-13 04:19:00 IST
கர்நாடகத்தில் கடந்த 6 மாதத்தில் கொரோனாவுக்கு 110 ஆசிரியர்கள் தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் அதிகபட்சமாக 35 பேர் உயிர் இழந்துள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஆசிரியர்களும் அதிகளவில் பலியாகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி 6 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 110 ஆசிரியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு தங்களது உயிரை பறி கொடுத்திருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனாவுக்கு மத்தியிலும் ஆசிரியர்களை பல்வேறு பணிகளுக்கு அரசு பயன்படுத்தி வந்தது. பி.யூ.சி, 2-ம் ஆண்டு ஆங்கில தேர்வு, 10-ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இவ்வாறு பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததுடன், அவர்களில் பெரும்பாலானோர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் தான் அதிகளவில் ஆசிரியர்கள் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் பெலகாவி தாலுகாவில் 18 ஆசிரியர்களும், சிக்கோடி தாலுகாவில் 17 ஆசிரியர்களும் கொரோனாவுக்கு உயிர் இழந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக பாகல்கோட்டை, கொப்பல் மாவட்டங்களில் தலா 13 ஆசிரியர்களும், ராய்ச்சூரில் 9 ஆசிரியர்களும் கொரோனாவுக்கு உயிர் இழந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பள்ளிகளை திறக்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் கொரோனாவுக்கு 110 ஆசிரியர்கள் பலியாகி இருப்பது சக ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்பட்டு இருக்கிறது.

Similar News