செய்திகள்
ராகுல் காந்தி

எஸ்.சி-எஸ்.டி. இடஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல் காந்தி

Published On 2020-02-10 13:36 IST   |   Update On 2020-02-10 13:36:00 IST
எஸ்.சி.-எஸ்.டி. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, மாநில அரசு பணிகளில் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து ஐகோர்ட்டு, அரசு உத்தரவை ரத்து செய்தது. குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகாண்ட் அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது மாநில அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கட்டாயம் இல்லை. பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று அதிரடியாக தீர்ப்பளித்தது.


இட ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எஸ்.சி.-எஸ்.டி. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம். எஸ்.சி.-எஸ்.டி. மக்களின் முன்னேற்றத்தை ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா விரும்பவில்லை.

இட ஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் மோடி மற்றும் மோகன் பகவத்தின் கனவு நிறைவேற விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News