செய்திகள்
முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்

பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாள் அவகாசம் அளித்த ஆளுநர்

Published On 2019-11-25 06:35 GMT   |   Update On 2019-11-25 09:18 GMT
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. 
  • அவசர அவசரமாக பதவிப்பிரமாணம் செய்த ஆளுநரின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  
  • ஆளுநரின் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்.

புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநிலத்தில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனடியாக விளக்கம் அளித்தார். அத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 



இவ்வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியமைக்க வருமாறு பட்னாவிசுக்கு ஆளுநர் அனுப்பிய அழைப்பு கடிதம், மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் அளித்த, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் உள்ளிட்ட விவரங்கள் சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன. 

இதையடுத்து விசாரணை தொடங்கியது. உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற வழக்குதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

மகாராஷ்டிர பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதாடும்போது, முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கண்ணா, பெரும்பான்மை இருக்கிறது என்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வாதாடிய முகுல் ரோகத்கி, மகாராஷ்டிர சட்டசபையில் பட்னாவிஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்திருப்பதாக கூறினார். அதை 3 அல்லது 4 நாட்களாக குறைக்க முடியாது என்றும், இன்றோ நாளையோ வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் அவர்  கூறினார்.
Tags:    

Similar News