செய்திகள்
ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் ரோபோ. அருகில் நடிகர் மணியன்பிள்ளை ராஜு.

கேரளாவில் புதுமை- ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோ

Published On 2019-07-15 10:27 IST   |   Update On 2019-07-15 10:27:00 IST
கேரளாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற பெண் ரோபோக்களை அறிமுகம் செய்து உள்ளனர்.
திருவனந்தபுரம்:

‘ரோபோ’ என்று அழைக்கப்படும் எந்திர மனிதர்கள் பல்வேறு பணிகளிலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதனால் செய்ய முடியாத கடினமான பணிகளில் முதலில் ஈடுபடுத்தப்பட்ட இந்த ரோபோக்கள் தற்போது பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற பெண் ரோபோக்களை அறிமுகம் செய்து உள்ளனர்.

கண்ணூர் நகரில் உள்ள கோபாலன் தெருவில் செயல்படும் இந்த உணவு விடுதியில் அலீனா, ஹெலன், ஜேன் என்ற பெயரில் 3 அதிநவீன ரோபோக்கள் மூலம் உணவு பரிமாறி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரோபோக்களை அறிமுகம் செய்தார்.


இந்த ரோபோக்கள் வாடிக்கையாளர்களின் அழைப்பை புரிந்து கொண்டு அவர்களை நோக்கி செல்லும், வழியில் யார் நின்றாலும் அவர்களை அன்புடன் விலகிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளும்.

நமக்கு தேவையான உணவுகளை பட்டியலிட்டால் அவற்றை பதிவு செய்து உணவை கொண்டுவந்து கொடுக்கும். செல்போன் ஆப்கள் மூலமும் இந்த ரோபோக்களுக்கு உத்தரவுகளை உணவு விடுதி உரிமையாளர்கள் பிறப்பித்து அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார்கள்.

உணவு விடுதிக்கு வரும் குழந்தைகளுடன் இந்த ரோபோக்கள் நடனமாடி அவர்களை மகிழ்விக்கும். கேரளாவிலேயே முதல் முறையாக உணவு விடுதியில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் அது இங்கு வருபவர்களை மிகவும் கவர்வதாக உள்ளது.

Similar News