செய்திகள்

12ம் வகுப்பு மாணவிக்கு 99 மதிப்பெண்களுக்கு பதிலாக 0 மதிப்பெண் வழங்கிய ஆசிரியை பணி நீக்கம்

Published On 2019-04-29 06:08 GMT   |   Update On 2019-04-29 06:08 GMT
தெலுங்கானா மாநிலத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தின்போது 99 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு 0 மதிப்பெண் வழங்கிய தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். #TeacherSuspended
ஐதராபாத்:

தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் 12ம் வகுப்பிற்கான இடைநிலைத்தேர்வு நடைபெற்றது. இதில் 9.74 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 3.28 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது.

தேர்வில் தோல்வியடைந்த 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து பெற்றோர்கள், மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாநில அரசு தேர்ச்சி அடையாத 3.28 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தெலுங்கானாவின் 12 தேர்வு மையங்களில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதில் 5 தேர்வு மையங்கள் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்தது.

இந்த தேர்வில் 12ம் வகுப்பைச் சேர்ந்த நவ்யா எனும் மாணவி 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் 0 மதிப்பெண் வழங்கியது கண்டறியப்பட்டது. உமா தேவி எனும் தனியார் பள்ளி ஆசிரியை இந்த விடைத்தாளை திருத்தியதாக தெரிய வந்துள்ளது.

உமா தேவிக்கு இடைநிலைத் தேர்வு ஆணையம் ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது. 

இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பான முழு விவரங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #TeacherSuspended





   
Tags:    

Similar News